tamilnadu

img

ரூ.370 கோடி எங்கே?

தொழில்துறை அமைச்சருக்கு கரும்பு விவசாயிகள் கேள்வி

சென்னை,ஜூலை 10-  திருத்தணி கூட்டுறவு ஆலையை மேம்படுத்த வேண்டும். ரூ.370 கோடி எப்.ஆர்.பி. பாக்கியை பெற்றுத்தர  நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழக தொழில்துறை அமைச்சருக்கு தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கம் சார்பில் கோரிக்கை மனு அனுப்பப்பட்டுள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்கத்தின் பொதுச்செயலாளர் டி.ரவீந்திரன் தொழில்துறை அமைச்சருக்கு  அனுப்பியுள்ள மனுவில் கூறியிருப்பதாவது:  திருவள்ளூர் மாவட்டத்தில் உள்ள ஒரே சர்க்கரை ஆலை யான திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலையின் செயல்பாடு மிகவும் பலவீனமடைந்துள்ளது. குறிப்பாக 2019-20ல் 4.11.2019ல் அரவை துவங்கி 10.2.2020 ல் அரவை முடித்துக் கொள்ளப்பட்ட 98 நாட்களில் மூன்றில் ஒரு பகுதி நேரம் மில்லில் அரவை நிறுத்தப்பட்டு விட்டதாக தெரிகிறது. 2019-20  அரவைப் பருவத்தில் நூறு முறைக்கும் மேல் ஏற்பட்ட இயந்திரக் கோளாரே இதற்கு காரணம் எனத் தெரிகிறது. கடந்த பல ஆண்டுகளாக 8.4 சதவீதம் பிழிதிறன் வந்த திருத்தணி ஆலையில் 2019-20 ல் 6.4 சதவீதம் அதாவது இரண்டு  சதவீதம் குறைவாக பிழிதிறன் வந்துள்ளது. இதனால் பெரும் பாதிப்பு ஏற்பட்டுள்ளது. இது குறித்து விசாரணை நடத்தி காரணங்களை கண்டறிந்து சரி செய்திட வேண்டும்.

மாநில அரசு திருத்தணி ஆலையை புனரமைத்து மேம்படுத்திட வேண்டுகிறோம். இதற்கு தேவையான நிதியை தமிழக அரசு ஒதுக்கீடு செய்திட வேண்டும். திருவள்ளூர் மாவட்டத்தில் 2020-21ல் தற்போது சுமார் 11500 ஏக்கர்கள் வரை கரும்பு பயிரிடப்பட்டுள்ளது. ஆனால் திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலைக்கு 5300 ஏக்கர்  கரும்பு மட்டுமே பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்நிலைமை களில் மாற்றத்தை ஏற்படுத்திட திருத்தணி கூட்டுறவு சர்க்கரை ஆலை புனரமைத்து மேம்படுத்திட வேண்டும். 2019-20ல் அரைத்த கரும்புக்கு கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை ஆலைகள் ரூ.95 கோடியும், தனியார்  சர்க்கரை ஆலைகள் ரூ.125 கோடியும் எப்.ஆர்.பி. பாக்கி வைத்துள்ளனர். இதுதவிர 2018-19 ல் அரைத்த கரும்புக்கு போளூர், வாசுதேவநல்லூர், சங்கராபுரம் தரணி சர்க்கரை ஆலைகள் ரூ.71 கோடி வரை எப்.ஆர்.பி. பாக்கி வைத்துள்ளனர். கரும்பு கட்டுப்பாடு சட்டப்படி 15 சதம் வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும். அம்பிகா, ஆரூரான் சர்க்கரை ஆலைகள் 2017-18 எப்.ஆர்.பி. பாக்கி ரூ.75 கோடி வரை விவசாயிகளுக்கு தர வேண்டி உள்ளது. 

சட்டப்படி 14 நாட்களில் தர வேண்டிய எப்.ஆர்.பி. பாக்கியை விவசாயிகளுக்கு தராததால் கொரோனா ஊரடங்கு  காலத்தில் விவசாயிகள் பெரும் சிரமத்தை சந்திக்கின்றனர். குறிப்பாக வங்கிகளில் பெற்ற கரும்பு பயிர் கடனை உரிய காலத்தில் கட்ட முடியாமல் புதிய கடன் பெற முடியாமல் விவசாயிகள் அவதிப்படுகின்றனர். எனவே சட்டப்படி விவசாயிகளுக்கு 14 நாட்களில் தர வேண்டி எப்.ஆர்.பி. பாக்கியை வட்டியுடன் பெற்றுத்தர வேண்டும். கூட்டுறவு பொதுத்துறை மற்றும் தனியார் சர்க்கரை ஆலை கள் தர வேண்டிய எஸ்.ஏ.பி. பாக்கியை மாநில அரசு பெற்றுத்தர வேண்டும். கூட்டுறவு மற்றும் பொதுத்துறை சர்க்கரை தர வேண்டிய ரூ.167 கோடி எஸ்.ஏ.பி. பாக்கியை நீதிமன்ற உத்தரவுப்படி வழங்கிட  வேண்டும். இதை போல எம்.ஆர்.கே. செங்கல்வராயன், வேலூர் கூட்டுறவு ஆலைகள் உட்பட கூட்டுறவு ஆலைகள் நீதிமன்ற உத்தரவுபடி விவசாயிகளுக்கு தர வேண்டிய லாபப்பங்கு தொகை 5ஏ, ரூ.14 கோடியை பெற்றுத்தர வேண்டும். 2019-20ல் அரைத்த கரும்புக்கு ஒரு டன்னுக்கு ஊக்கத் தொகையாக ரூ.400 விவசாயிகளுக்கு நேரடியாக வங்கிக் கணக்கில் மாநில அரசு வழங்க வேண்டும்.

புதுக்கோட்டை மாவட்டம் அறந்தாங்கியில்இயங்கி வந்த இஐடி பாரி சர்க்கரை ஆலையின் பெரும்பகுதி கரும்புப் பகுதி, குறுங்குளம் அறிஞர் அண்ணா பொதுத்துறை சர்க்கரை ஆலையின் வசமிருந்து 1979ஆம் ஆண்டில் இஐடி பாரி ஆலை துவங்கப்பட்ட போது பிரித்து தரப்பட்டதாகும். தற்போது இஐடி பாரி ஆலை இல்லாத நிலையில் இஐடி பாரி ஆலையின் வசமிருந்த கரும்பு பகுதியை குறுங்குளம் அறிஞர் அண்ணா ஆலையுடன் சேர்த்திடவேண்டுமென கேட்டுக் கொள்கிறோம். தூரம் அடிப்படையிலும் குறுங்குளம் அறிஞர் அண்ணா சர்க்கரை ஆலை தான் அருகில் இருக்கிறது என்பதையும் தங்களின் மேலான கவனத்திற்கு கொண்டு வருகிறோம். நாகை மாவட்டம் தலைஞாயிறு என்.பி.கே.ஆர். கூட்டுறவு சர்க்கரை ஆலை பல ஆண்டுகளாக இயங்கவில்லை. என்.பி. கே.ஆர். கூட்டுறவு ஆலையை புனரமைத்து செயல்படுத்திட வேண்டும். மேற்கண்ட கோரிக்கைகளை கரும்பு விவசாயிகளின் நலன் கருதி நிறைவேற்றிட வேண்டும்.  இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

;